ஆவடி குமார் , அதிமுக 
கட்டுரை

இப்போதும் பலமாகத்தான் இருக்கிறோம் !

பா. ஏகலைவன்

அதிமுகவின் தொண்டர் பலம் இன்றும் அப்படியே உள்ளது. பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்குச் செய்திருக்கின்றோம். மக்கள் யாரும் எங்களை அதிருப்தியோடு பார்க்கவில்லை.

எதிர்க்கட்சியினர்தான் அப்படி பேசி வருகிறார்கள். பா.ஜ.க மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததை, கொள்கையற்ற கூட்டணி என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள். இது தோல்விக்கு வழி வகுக்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேர்தலின் போது அமைத்துக்கொள்ளும் கூட்டணி எல்லாம் பதவி பகிர்வுக்கான கூட்டணிதானே ஒழிய கொள்கை அடிப்படையில் இல்லை. அதே நேரத்தில், இந்த விமர்சனத்தை வைப்பதற்குக்கூட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தகுதி இல்லையே. 1967&ல் அண்ணா இருந்தபோது, திமுக&வின் கொள்கைக்கு நேர் எதிராக இருந்த ராஜாஜியோடு கூட்டணி வைத்தார். இப்போது இந்த 2019&ல்கூட, திமுக&வை ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த வைகோ, திமுக கூட்டணியில் உள்ளார்.

அடுத்து திமுக தனித்து நிற்கத் துணிவிருந்தால், அதிமுக&வும் தனித்தே நிற்கும். எதிராளிகள் கூட்டணி அமைத்துக் கொள்ளும்போது நாங்கள் அமைத்துக்கொள்ள தேவையுள்ளது. இப்போதுகூட நாங்கள் அவர்களைப் போன்று டெல்லியில் நின்று கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை.புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருந்தபோது எப்படியோ, அப்படித்தான் இப்போதும், பாஜக&வினர்தான் இங்கே வந்து கூட்டணி பேசி& ஒப்பந்தம் போட்டனர். எங்கள் கூட்டணியில்தான் பா.ஜ.க. உள்ளது. பா.ம.க. உள்ளது. அடுத்து, வரப்போகின்ற 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக மட்டுமே போட்டியிடும். வேறு கூட்டணி கட்சியினருக்குப் பங்கு கிடையாது.

திமுக - வினரால் அப்படி சொல்ல முடியுமா? 21 சட்டமன்ற தொகுதியிலும் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு இல்லை என சொல்ல துணிவிருக்கிறதா? ஆக, நாங்கள் இப்போதும் பலமாகத்தான் இருக்கின்றோம். தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவோடுதான் இருக்கின்றோம். வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் தெளிவாக இருக்கின்றோம்.

பொது மக்களுக்கான பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். விவசாயி களுக்காக அதிமுக அரசும் திட்டங்களை அறிவித்து உதவித் தொகையை கொடுக்கிறது. பிரதமர் மோடி அவர்களும் 6 ஆயிரம் ரூபாய் என நடைமுறைப்படுத்தியுள்ளார். இவையெல்லாம் எங்களுக்கு வெற்றி வாய்ப்பைத் தரும்.

டி.டி.வி. தினகரன் அவர்களால் எங்களின் ஓட்டுவங்கி எந்த விதத்திலும் பாதிக்காது. அம்மா தலைமையில் உருவான இந்த அ.இ.அ.தி.மு.க. என்கிற இரும்புக் கோட்டை இன்றும் அப்படியேதான் இருக்கிறது. அவரால் எங்களின் ஓட்டு பிரிந்துவிட்டது என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. எம்.ஜி.ஆர் இருந்த போது இப்படி பலர் பிரிந்து சென்று போட்டியாக ஆரம்பித்துப் பார்த்தார்கள். புரட்சித் தலைவி அம்மா காலத்திலும் அப்படி முக்கிய நபர்கள் பலர் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தார்கள். அதனால் எல்லாம் புரட்சித் தலைவி அம்மாவின் இந்த கட்சி குலைந்துவிடவில்லை. தொண்டர்கள் அப்படியேதான் இருக்கின்றார்கள். ஒரு பகுதியில் உள்ள சிறு அளவிலான நபர்கள்தான் அங்கே இருக்கின்றார்கள். அதனால் எல்லாம் எங்களின் வாக்கு வங்கி பாதிக்காது. ஒரு சிறு அணி பிரிந்து நிற்கிறதென்றால், அதற்கான மாற்றுத் திட்டங்களை வகுத்திருக்கின்றோம். அது எங்களுக்குதான் வெற்றி வாய்ப்பை தரும். பிரிந்து சென்றவர்களுக்கும்  தொடக்கத்தில் இருக்கும் மாயை போகப்போக புரிந்துவிடும்.

அம்மா உருவாக்கி கொடுத்துவிட்டுப் போன அதிமுக தொண்டர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். அதனால் எங்களின் வெற்றி வாய்ப்பு உறுதி, என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

மார்ச், 2019.